ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது அல்ல. ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் குண்டு மழை பொழிவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்றுள்ளார்.
பிரான்சில் கால் பதித்தது முதலே ஈரானுடனான தனது ஒப்பந்தத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசி வரும் ட்ரம்ப், சில ‘முட்டாள் மனிதர்கள்’ பரிந்துரைத்த ‘உலகளாவிய அழுத்தத்தை’ தான் தடுத்து நிறுத்தியதாக உரிமை கோரினார். ஆனால், முட்டாள் யார் என்பதை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கூறும்போது, ‘‘ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானதல்ல. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அவர்கள் (ஈரான்) ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றாலோ, நாங்கள் மீண்டும் அவர்களின் தலைக்கு நேராக குண்டுகளை வீசத் தொடங்கிவிடுவோம். ஏனென்றால் அவர்கள் கடந்த 47 ஆண்டுகளாகத் தவறாகவே நடந்து கொண்டுள்ளனர்’’ என்றார்.
ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கெனவே ஓரளவு திறக்கப்பட்டுவிட்டது என்றும், அடுத்த ஒன்று அல்லது 2 நாளில் அது முழுமையாகத் திறக்கப்பட உள்ளது என்றும் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.





