ஜேர்மன் நாடாளுமன்றக் குழு தலைவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மன் நாடாளுமன்றக் குழு தலைவர் ராஜினாமா
ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸின் கட்சியான Christian Democratic Union (CDU), மற்றும் அதன் சகோதரி கட்சியான Christian Social Union (CSU) கட்சிகளின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருப்பவர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn).
ஸ்பான், அமெரிக்காவில், வாடகைத்தாய் ஒருவர் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
ஜேர்மனியில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், வெளிநாடொன்றில் வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தையை ஜேர்மனிக்குக் கொண்டுவர தடையேதும் இல்லை.
விடயம் என்னவென்றால், CDU கட்சி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான தடையை நீட்டிக்க பிப்ரவரி மாதம் வாக்களித்தது.
அப்படியிருக்கும் நிலையில், கட்சிக் கொள்கைக்கு மாறாக வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட ஸ்பானுக்கு, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்க தகுதியில்லை என அவர் சார்ந்த கட்சியினரே கருத்து தெரிவித்தனர்.
ஆகவே, ஸ்பான் தனது நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கின.

அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை தனது நாடாளுமன்றக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்பான்.
இந்நிலையில், ஸ்பானின் ராஜினாமாவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யலாம் என ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆக, அமைச்சரவையில் விரைவில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என கருதப்படுகிறது.



