பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்குகளில் அமெரிக்காவின் ‘பெடரல் ஜூடிசியல் சென்டர்’ வழங்கும் அறிவியல் குறிப்புக் கையேடு குறித்து மறுஆய்வு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
இந்த கையேட்டில் உள்ள “நம்பகத்தன்மையற்ற” தகவல்கள் நாட்டிற்கு “பெரிய இழப்புகளை” ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “நமது நாட்டின் மத்திய நீதிபதிகள் உண்மைகளையும் அறிவியலையும் பெற தகுதியானவர்கள்; பருவநிலை மாற்றம் குறித்த அரசியல் மோசடிகளையோ அல்லது போலி அறிவியலையோ அல்ல.
இந்த உண்மையின் அடிப்படையில், மத்திய அரசின் சஸ்பென்ஷன் மற்றும் விநியோகத் தடை அதிகாரிகளை இந்த நடவடிக்கை குறித்து மறுஆய்வு செய்ய நான் உத்தரவிடுகிறேன்.” ட்ரம்பின் இந்த உத்தரவு எத்தகைய “நடவடிக்கை” அல்லது யாருடைய செயல்பாடுகள் குறித்த விசாரணைக்கானது என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
இது குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகையும் உடனடியாக முன்வரவில்லை. முன்னதாக, அமெரிக்காவின் மத்திய நீதித்துறை, அறிவியல் சான்றுகள் குறித்த தனது புதிய கையேட்டில் இருந்து பருவநிலை மாற்றம் தொடர்பான அத்தியாயத்தை நீக்கியிருந்தது.
இந்த அத்தியாயம் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக இருப்பதாக குடியரசுக் கட்சி மாநில வழக்கறிஞர்கள் வாதிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீதிமன்ற வழக்குகளில் சமர்ப்பிக்கப்படும் அறிவியல் சாட்சியங்களை மதிப்பீடு செய்ய நீதிபதிகள் இத்தகைய கையேடுகளையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
கொலம்பியா சட்ட கல்லூரியை சேர்ந்த ஜெசிகா வென்ட்ஸ் மற்றும் ராட்லி ஹார்டன் ஆகியோரால் எழுதப்பட்ட இந்த சர்ச்சைக்கரிய அத்தியாயம், நீதிபதிகளுக்கு பருவநிலை அறிவியல் தொடர்பான வழக்குகளைக் கையாள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



