மலேசியாவில் அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அறிவிப்பு

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், மலேசிய அரசு முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம் காரணமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக உலகளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பல நாடுகள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வரிசையில், மலேசியாவில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறை அரசு துறைகள் மட்டுமின்றி, அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, கிடைக்கும் வளங்களை சீராக பராமரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும், ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுவதால், உலகளவில் மசகு எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், செலவுகளை கட்டுப்படுத்தும் சிக்கன நடவடிக்கையாக மலேசியா வீட்டில் இருந்து வேலைசெய்யும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.