உலகிலேயே தீர்க்கப்படாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை தொடர்ந்தும் விளங்கி வருகிறது. தமிழினவழிப்பின் பல தசாப்த காலப் பகுதியில், 60,000 முதல் 100,000 வரையிலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப் போர்க் காலப் பகுதியில் தீர்க்கப்படாத இந்த வழக்குகளில் பெரும்பாலானவை தீவின் வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ் சிவிலியன்கள் தொடர்பானவையாகும்.
செம்மணி, மண்டைதீவு, மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் இதர இடங்களில் வடக்கு-கிழக்கு எங்கும் ஏராளமான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டமையானது, சுயாதீன தடயவியல் விசாரணை மற்றும் நீதித் துறைப் பொறுப்புக் கூறலைக் கோரும் அழுத்தமான பொருள்சார் சான்றுகளை வழங்கியுள்ளது. மனித எலும்புக் கூடுகள், தனிப்பட்ட உடமைகள் மற்றும் பிற தடயவியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவோ, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவோ அல்லது கட்டளைப் பொறுப்பை (Command responsibility) தீர்மானிக்கவோ ஒரு வெளிப்படையான மற்றும் நம்பகமான செயல்முறையை உருவாக்க இலங்கை அரசாங்கம் தவறி விட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு, தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் அடிப்படை உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
வெளிப்படையான டி.என்.ஏ (DNA) அடையாளங் காணல் செயல்முறைகள் இல்லாமை, சர்வதேச தடயவியல் நிபுணத்துவப் பங்களிப்பை அனுமதிக்கத் தவறியமை மற்றும் சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்குத் தொடர்ந்து காட்டப்படும் எதிர்ப்பு ஆகியன, மோதலின் போது நடந்த மிகக் கொடூரமான குற்றங்கள் தொடர்பான சான்றுகள் அழிக்கப்படும், மறைக்கப்படும் அல்லது ஆராயப்படாமல் போகும் அபாயத்தில் உள்ளன என்ற கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
பின்னணி
பல தசாப்தங்களாக, வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ் குடும்பங்கள் இராணுவ நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்ட, அரச அதிகாரிகளிடம் சரணடைந்த அல்லது காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் பற்றிய பதில்களைத் தேடி வருகின்றனர்.
இலங்கையில் தீர்க்கப்படாத மிக தீவிரமான மனித உரிமைப் பிரச்சினைகளில் ஒன்றாக வலிந்து காணாமல் ஆக்கப்படும் விவகாரம் நீடிக்கிறது. நாடு முழுவதும், குறிப்பாக தமிழர்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் ஏராளமான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
…




