சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு அதிகரிப்பு

சீனா​வின் பல துறை​களி​லும் இந்தியர்கள் கனிச​மாக பணி​யாற்​றுகின்​றனர். இவர்​கள் சந்​திக்​கும் பிரச்​சினை​கள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்​ஜிங்​கில் உள்ள இந்​திய தூதரகம் சார்​பில் முதல் முறை​யாக ‘திறந்த வெளி’ ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

இதில் இந்​தி​யத் தூதர் விக்ரம் துரைசாமி, ஆலோ​சகர்​கள் நிதின் ஜீத் சிங் மற்​றும் ரமேஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியர்​களிடம் கருத்து கேட்​டனர். இதில் பங்​கேற்ற இந்​தி​யர்​கள் கூறிய​தாவது: சீன சமூக ஊடகத் தளங்​களில் இந்​தி​யர்​களின் உணவுப் பழக்​கவழக்​கங்​கள் மற்​றும் கலாச்​சா​ரம் குறித்த கருத்துகள் உட்​பட, இந்​தி​யர்​களுக்கு எதி​ராக அவதூறுகள் பரப்பப்படு​வது அதிகரித்துள்ளது.

மேலும், சீனா​வால் இந்​திய வல்​லுநர்​களுக்கு வழங்​கப்​படும் வேலை விசாக்​களின் எண்​ணிக்கை குறைந்து வரு​கிறது. வாழ்க்கைத் துணையாக வருபவர்கள்​ சீனாவில் வேலை செய்வதில் உள்ள கட்​டுப்​பாடு​கள் அதி​கரித்​துள்​ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த இந்​திய தூதர் விக்ரம் துரை​சாமி கூறிய​தாவது: இருதரப்பு உறவு​களை மேம்​படுத்​தும் முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

சீன சமூக ஊடகங்​களில் இந்​தி​யர்​கள் பற்றி அவதூறு பரப்​பப்​படு​வது அதி​கரித்​துள்​ளது குறித்து சீன அரசும் கவலை​யடைந்​துள்​ளது. அதைத் தடுக்க சீன அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இந்​திய தூதரகம் தனது சமூக ஊடகப் பக்​கங்​களின் மூலம் உண்​மைத் தகவல்​களைப் பகிர்ந்து தவறானத் தகவல்​களை எதிர்த்து வருகிறது. வசந்த மேளா போன்ற வரு​டாந்​திர நிகழ்ச்​சிகளுக்​குக் கிடைத்த பெரும் வரவேற்​பைத் தொடர்ந்​து, இந்​தி​யா​வின் பன்​முகக் கலாச்​சா​ரம் மற்​றும் உணவு​களைக் காட்​சிப்​படுத்த மேலும் பல கலாச்​சார நிகழ்ச்​சிகளை நடத்​தத் தூதரகம் திட்​ட​மிட்​டுள்​ளது.

அதோடு, வேலை தொடர்​பான பிரச்​சினை​களை எதிர்​கொள்​ளும் இந்​தி​யர்​களுக்கு உதவ, சட்ட வல்​லுநர்​களு​டன் இணைந்து ஒரு அமைப்பை உரு​வாக்க தூதரகம் பணி​யாற்றி வரு​கிறது.

தூதரகச் சேவை​களை மேம்​படுத்​த​வும் இந்​தி​யர்​களின் கவலைகளைத் தீர்க்​க​வும் ‘திறந்​தவெளி’ கூட்​டங்​களை அடிக்​கடி நடத்​தத் தூதரகம் திட்​ட​மிட்​டுள்​ளது. இந்​தி​யா​விற்​கான பயணத்தை எளி​தாக்​கும் வகை​யில், அடுத்த வாரம் முதல் இந்​தி​ய வி​சாவுக்​கு விண்ணப்பிக்கும்​ சீனக்​ குடிமக்​களுக்​​கான ஆவண நடை​முறை​களைத்​ தூதரகம்​ மேலும்​ எளி​தாக்​கும்​. இவ்​​வாறு விக்​ரம்​ துரைசாமி கூறி​னார்​.