வசந்த கரன்னாகொட, யோஷித்தவுக்கு எதிராக நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றப்பத்திரம் தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், இலங்கை கடற்படையின் தளபதியாக கடமையாற்றிய போது, யோஷித ராஜபக்ஷ என்ற பிரதிவாதிக்கு சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியின் பயிற்சி நெறியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாட்டின் ஊடாக சட்டவிரோதமான முறையில் இலாபமடைந்ததாக குற்றம் சாட்டி யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதிவாதிகளுக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.