கற்பிட்டி, சிலாபத்துறையில் 677 கிலோவிற்கும் அதிகளவான பீடி இலைகள் கைப்பற்றல்!

கற்பிட்டி – வெள்ளைத்தீவு மற்றும் சிலாவத்துறை – சாவேரியபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 677 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை (01)  மற்றும்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இத்தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் ‘விஜய’ மற்றும் ‘தேரபுத்த’ ஆகிய கடற்படை முகாம்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த கடற்கரைப் பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 15 பைகளைச் சோதனையிட்ட போது, அவற்றில் அடைக்கப்பட்டிருந்த 677 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரின் வருகையை உணர்ந்த கடத்தல்காரர்கள் அப்பொருட்களைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் புத்தளம் மற்றும் மன்னார் கலால் திணைக்கள அலுவலகங்களிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளன.