அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வீதிப் போராட்டம் தயார்: பிரதீப் சார்ள்ஸ்!

நுவரெலியாவில் மே தின கூட்டத்தில் உரையாற்றும் ஜனாதிபதிக்கு, நாளை மக்கள் மத்தியில் செல்வதற்கு திராணி இருக்காது. மே தினம் என்பதால் எரிபொருள் விலையேற்றத்தை மறைத்து ஜனாதிபதி பொய் கூறுகின்றார் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படும் வரை எமது போராட்டம் ஓயப்போவதில்லை என அபிமானி ஜன ஜய கட்சியின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய அரசியல் கட்சிகளைப் போல ஒரு நபருக்கு 1500 ரூபாய் பணம் வழங்கி, மதுபானம் மற்றும் சோற்றுப் பார்சல்களைக் கொடுத்து, தொழிலாளர்களை வீதிகளில் கூச்சலிடச் செய்யும் மே தின ஊர்வலங்களை நடத்தும் வாய்ப்பு எமது அபிமானி ஜன ஜய கட்சிக்கும் இருந்தது.

மாடுகளை வீதிக்குக் கொண்டு வந்து, அவற்றுக்குப் புல் ஊட்டும் வகையிலான போலி நாடகங்களை அரங்கேற்ற இந்த அரசாங்கம் எமக்குக் கற்பிக்கத் தேவையில்லை. இந்த நாட்டைச் சூறையாடி, ஊழல் செய்த அரசாங்கங்களை வீட்டிற்கு அனுப்பும் போராட்டத்தை நாம் ஏற்கனவே வீதியிலிருந்தே ஆரம்பித்து விட்டோம்.

சமையல் எரிவாயு மோசடி இடம்பெற்ற போதும், நச்சுத்தன்மையுடைய தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு ஊட்டப்பட்ட போதும், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து மக்கள் நடுவீதியில் உயிரிழந்த போதும் நாம் மக்களுக்காக முன்னின்று போராடினோம்.

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் மற்றும் சுகாதார ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு மக்கள் முடக்கப்பட்டிருந்த வேளையில், மதுபான சாலைகளைத் திறக்க அனுமதி வழங்கிய அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிய துணிச்சலான போராட்டக் குழுவினரைக் கொண்ட கட்சியே எமது கட்சியாகும்.

நுவரெலியாவில் மே தினத்தில் உரையாற்றிய ஜனாதிபதிக்கு, மக்கள் மத்தியில் செல்வதற்கு திராணி இருக்காது. மே தினம் என்பதால் எரிபொருள் விலையேற்றத்தை மறைத்து வைத்திருக்கும் ஜனாதிபதிக்கு நான் சவால் விடுகின்றேன். சிலதினங்களில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்த்தப்படவுள்ளன.

நுவரெலியா தோட்டப்பகுதி மக்களிடம் சென்று ஜனாதிபதி மேடைப் பேச்சுகளைப் பொழிகின்றார். ஆனால், இதன் காரணமாக  உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் போது அந்த மக்களே அவருக்குப் பதிலடி கொடுப்பார்கள். ஆனால் சில தினங்களில் மண்ணெண்ணெய் விலை 27 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்படவுள்ளன.

இதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து முடித்துவிட்டது. தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்துவிட்டு, அதன் நட்டத்தை மக்கள் மீது சுமத்த மாட்டோம் எனக் கூறிய இந்த அரசாங்கம், அந்தப் பாடுகளையும் ஈடுகட்ட எரிபொருள் விலையை உயர்த்தப் போகின்றது என்பது உறுதி.

தொழிலாளர்களை மாடுகளைப் போலப் பேருந்துகளில் ஏற்றி வந்து, அவர்களுக்குச் சொற்பப் பணத்தையும் மதுபானத்தையும் கொடுத்து, வீதிகளில் கௌரவத்தைச் சீரழிக்கும் ஒரு மே தினத்தைத்தான் இந்த அரசியல் கட்சிகள் நடத்துகின்றன.

ஆனால், வருங்காலத்தில் எமது ஆட்சியின் கீழ், தொழிலாளர்களுக்கு முறையான கௌரவம் அளிக்கப்பட்டு, அவர்களை கௌரவமான முறையில் கவனிக்கும் உண்மையான மே தினத்தை நாம் கொண்டாடுவோம்.

டி.எஸ்.சேனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல, டட்லி சேனநாயக்க, ஏ.ஈ. குணசிங்க, டி.பி. இலங்கரத்ன போன்ற மாபெரும் தலைவர்கள் தொழிலாளர் உரிமைகளுக்காக அன்று வீதியில் போராடினார்கள். இன்று அந்தப் போராட்டத்தை அத்துலி, சஞ்சீவ, சஞ்சய மாவத்த, அசேல சம்பத் மற்றும் ரவி குமுதேஷ் போன்ற தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவர்களை அச்சுறுத்த அரசாங்கம் துப்பாக்கி ரவைகளைத் தயார் செய்திருக்கலாம். ஆனால், நாம் எதற்கும் அஞ்சப்போவதில்லை.

வெறும் 10 அல்லது 15 பேர் ஆர்ப்பாட்டம் செய்வதால் எங்களை வீட்டிற்கு அனுப்ப முடியுமா என ஜனாதிபதி சவால் விடுகின்றார். ஜனாதிபதி அவர்களே, நீங்கள் பேசிய பொய்களை விட உண்மையை ஆழமாகப் பேசும் ஒரு நபரால் கூட உங்களுக்குப் பாரிய சவாலை ஏற்படுத்த முடியும். உங்களை வீட்டிற்கு அனுப்பும் அந்தப் போராட்டத்தை நாம் இங்கிருந்து ஆரம்பிக்கின்றோம். மக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படும் வரை எமது போராட்டம் ஓயப்போவதில்லை என்றார்.