இந்தியாவுடன் இணைந்து 30 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்

பொருளாதார மாற்றம், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லுமாறு  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

ZEE Media WION உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ மாநாடு இன்று சனிக்கிழமை (02) கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை தனது மீட்சியை தாண்டி நிலையான பேரினப் பொருளாதாரத்தின் அடித்தளத்தின் மீது வேகமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான அபிவிருத்திக் கட்டத்திற்குள் பிரவேசித்து வருகின்றது.  இங்கு இந்தியாவை நாம் ஒரு போட்டியாளராக பார்க்காமல் நமது முக்கிய பங்காளியாக கருத வேண்டும். இரு தரப்பு ஒத்துழைப்பிற்கான வாய்ப்பாக உற்பத்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் எழுச்சி இங்கு அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியாவிற்கு தமது ஆதரவைப் பெற்றுத் தருவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இங்கு தனது தொலைநோக்கை முன்வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், சட்டச் சீர்திருத்தங்கள், வலுவான தரவுப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்புக் கட்டமைப்புகள் மற்றும் நாடு முழுவதும் டிஜிட்டல் உள்ளடக்கல் முயற்சிகள் மூலம் 2030 மற்றும் 2035 க்கு இடையில் 30 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான யோசனையை முன்வைத்தார்.

மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விநியோகச் சங்கிலி, சுற்றுலா போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, இலங்கையை இந்தியாவின் உற்பத்தி ஆற்றலுக்கு துணைசெய்யும் கேந்திர ஸ்தானமாக நிலைநிறுத்த வேண்டும் என்றும், இதில் இந்தியாவின் UPI கட்டமைப்பை இலங்கை கியூ.ஆர் முறைமையுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் தடையற்ற எல்லை கடந்த பரிவர்த்தனைகளை எளிதாக்குவதும், திருகோணமலையை பிராந்திய வலுச்சக்தி ஆற்றல் மையமாக மேம்படுத்தும் திட்டங்களையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு முன்வைத்தார்.

சுற்றுலாத் துறை தொடர்பாக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை அளவு மட்டம் அடிப்படையிலான வளர்ச்சியை தாண்டி உயர் மதிப்புமிக்க, நிலையான அனுபவங்களை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும், உலகலாவிய ரீதியில் “Made in Sri Lanka” நாமத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

திறமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தி,  பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் பயன் கிட்ட  வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, நாட்டுக்கு நல்லதைச் சொல்லும், நல்லதைச் செய்யும் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்கு பெறுமானம் சேர்க்கும் கொள்கைகளுக்கு ஆதரவப் பெற்றுக் கொடுத்து வருகின்றது என்றும்,  நாட்டிற்கு பெறுமானம் சேர்க்காத கொள்கைகளை எதிர்த்து வருவதாக கூறி, இலங்கையின் அடுத்த கட்ட முன்னேற்றத்தில் பங்கேற்க உலக முதலீட்டாளர்களுக்கு இங்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.