இரத்தினபுரியில் மிரட்டிப் பணம் பறித்த எஹலியகொட காவல் துறை நிலையப் பொறுப்பதிகாரி கைது!

சட்டவிரோதமான முறையில் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் எஹெலியகொட  பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி , இரத்தினபுரி பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் நேற்று (03) புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணிக்கக்கல் ஒன்று திருடப்பட்டமை தொடர்பான முறைபாடு குறித்து விசாரணை நடத்திய போது, சட்டவிரோதமான முறையில் செயற்பட்டு, சாட்சிகள் மற்றும் சந்தேகநபர்களுக்குச் சொந்தமான பணத்தைக் கட்டாயப்படுத்திப் பறித்துக்கொண்டமை மற்றும் அதனை விசாரணைப் பதிவுகளில் காண்பிக்காது மோசடி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இரு நபர்கள், எஹெலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மற்றுமொரு பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டிற்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழு விடுத்த உத்தரவின் பேரிலேயே இந்த விசேட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து இரத்தினபுரி பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.