மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் தயாளகுமார் கௌரிக்கு, வட்ஸ்அப் சமூக ஊடகம் ஊடாக ஆபாச புகைப்படங்களை அனுப்பி அவதூறு விளைவிக்க முயன்ற நபருக்கு எதிராக புதன்கிழமை (03) மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் மக்கள் பிரதிநிதியாகவும், ஒரு பொதுச் செயற்பாட்டாளராகவும் அர்ப்பணிப்புடன் இயங்கி வரும் தனக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதெனில், சமூகத்தில் வாழும் சாதாரண பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு எவ்வாறு உறுதிப்படுத்தப்படும் என அவர் தனது முறைப்பாட்டில் மிகவும் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக சட்டப்படியான கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள கொக்குவில் பொலிஸார், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக ஆரம்பித்துள்ளனர்




