பலத்த காற்றுத் தொடர்பில் பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவி வரும் இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமையினால்,  பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்குப் பலத்த காற்றுத் தொடர்பான அவசர எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால் ‘அம்பர்’ நிறத்திலான விசேட ஆலோசனை அறிக்கை இன்று (04) வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளத

இந்த விசேட வானிலை ஆலோசனையானது 2026 ஜூன் 04 ஆம் திகதி பிற்பகல் 03.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை 2026 ஜூன் 05 ஆம் திகதி பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாகப் பின்வரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூரை முகடுகள் மற்றும் தகரங்களுக்குச் சேதங்கள் ஏற்படலாம்.

மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளுக்குச் சேதங்கள் உருவாகலாம்.

மரக் கிளைகள் முறிந்து விழலாம், மேலும் பாரிய மரங்கள் வேருடன் சாயலாம்.

நெல் வயல்கள், வாழைத் தோட்டங்கள், பப்பாசி மரங்கள் மற்றும் பழத் தோட்டங்களுக்குச் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகளுக்குச் சேதங்கள் ஏற்படலாம்.

கரையோரத்திற்கு அண்மையில் உள்ள தாழ் நிலப் பகுதிகளில் கடல் நீர் உட்புகலாம்.

பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

சேதமடைந்த கூரை ஓடுகள் அல்லது தகடுகளால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.

வீழ்ந்த மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து வீதிகளில் பயணிக்கும் போது அவதானமாக இருக்கவும்.

மிகவும் மோசமான இந்த வானிலை குறித்துத் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்படின், உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்துத் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு நுகர்வோரும் பொதுமக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.