ஊட்டச்சத்து சார்ந்த சுகாதாரக் கொள்கைகள் ஆரோக்கியமான சமூகத்துக்கு அடித்தளம்

நோய்கள் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை அளிப்பதோடு நின்றுவிடாமல், நோய் தடுப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தும் ஊட்டச்சத்து சார்ந்த தேசிய சுகாதாரக் கொள்கைகளை உருவாக்குவது ஆரோக்கியமான சமூகத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கம் மற்றும் இலங்கை ஊட்டச்சத்து மருத்துவக் கல்லூரி ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கல்வி அமர்வு நேற்று சனிக்கிழமைகொழும்பு ஷங்ரி-லா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது .இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுபோதும்,

ஊட்டச்சத்து என்பது சுகாதார சேவைகளின் ஒரு துணை அம்சம் அல்ல, மாறாக அது நோய்த்தடுப்பு, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சுகாதார அமைப்பின் ஒரு அடிப்படைக் கூறுகளாகும். எனவே, சுகாதாரக் கொள்கை வகுப்பதில் இருந்து மருத்துவமனை சேவைத் திட்டமிடல் வரை அனைத்து மட்டங்களிலும் ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும்.

மேலும், மக்களின் உணவுத் தேர்வுகள், உணவு அடையாளக் குறியீடுகள் மற்றும் சந்தை ஆகியவை மக்களின் உடல்நிலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். நுகர்வோர் ஆரோக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக, உணவுச் சட்டத்தின் கீழ் திரவ உணவுப் பொருட்களில் உள்ள சர்க்கரை அளவைக் குறிப்பிடுவதற்கான வண்ணக் குறியீட்டு முறை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

நவீன அறிவியல் அறிவை ஊக்குவிப்பதோடு, இலங்கையில் ஊட்டச்சத்து மருத்துவத் துறையில் அறிவியல் வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் மருத்துவ ஊட்டச்சத்துத் துறையை வலுப்படுத்துவதில் இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கம் மற்றும் இலங்கை ஊட்டச்சத்து மருத்துவக் கல்லூரி ஆற்றிவரும் பங்களிப்பு பாரிய ஒன்றாகும். இத்தகைய கல்வி மன்றங்கள், கொள்கை வகுப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதன் மூலம், மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரத்தை நேரடியாக மேம்படுத்தும் என்றார்.

சமீபத்திய செய்திகள்