கட்சி மாறுவதைத் தடுக்கும் சட்டமூலத்தின் மீது நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பை நடத்துங்கள்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது முன்பகுதி தரைதட்டி மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பலாகும். அதிலிருந்து ஆளுங்கட்சி உறுப்பினர்களே வெளியேறத் துடித்துக்கொண்டிருக்கும் நிலையில், கட்சி மாறுவதைத் தடுக்கும் சட்டமூலத்தின் மீது பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட அதே போன்றதொரு இக்கட்டான நிலை தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படுவதற்கு முன்னர், அதனை ஒரு எச்சரிக்கையாகவும் நல்லெண்ணத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

வெளிநாடுகளில் இருந்து எரிபொருளைக் கொண்டுவந்து, சேமித்து, விற்று, பணம் சம்பாதித்து, மீண்டும் எரிபொருள் கொண்டுவருவது போன்ற எளிய பணிகளைக் கூட செய்ய முடியாவிட்டால் எதற்கு ஓர் அரசாங்கம் என்று தேர்தல் மேடையில் தற்போதைய ஜனாதிபதி கேள்வி எழுப்பியதை நினைவுபடுத்துகின்றோம்.

இத்தகைய வெற்று வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர். ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுவதையும் பொய் கூறுவதையும் உடனடியாக நிறுத்திவிட்டு, நாடாளுமன்றத்திலேனும் உண்மைகளைப் பேச வேண்டும். தற்போதைய அரசாங்கமானது மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பலாகும்.

கப்பலின் முன்பகுதி ஏற்கனவே தரையில் மோதி மூழ்கத் தொடங்கிவிட்டது. கப்பலின் பின்புறத்தில் உள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்களே அங்கிருந்து வெளியேறத் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆளுங்கட்சியினருக்குத் தங்களது 159 உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடை செய்யும் புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

துணிவிருந்தால் இந்தச் சட்டமூலத்தின் மீது நாடாளுமன்றத்தில் ஒரு இரகசிய வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். அவ்வாறு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அரசாங்கம் நிச்சயமாகத் தோல்வியடையும் என்பதை எம்மால் உறுதியாகக் கூற முடியும் என்றார்.