கொழும்பில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான ஏழு பங்களாக்களை பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ அரச வாசஸ்தலங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தற்போதைய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக, குறித்த பங்களாக்களை பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் பயன்படுத்திய மொத்தம் 24 பங்களாக்களை அரச–தனியார் பங்களிப்பு அடிப்படையில் 30 வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக ஏழு பங்களாக்கள் தனியார் முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பயன்படுத்திய பங்களாக்களும், முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய சில பங்களாக்களும் இந்தத் திட்டத்தின் கீழ் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன.
குறித்த அரச கட்டடங்களை உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஏனைய வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இம் மாதம் 25ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத சொத்துக்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருமானம் ஈட்டுவதுடன், அவற்றை முறையாகப் பயன்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.




