உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், தாம் கைது செய்யப்பட்டதையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் எதிர்த்து, அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த எழுத்தாணை மனு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இடைக்கால மனு இன்று திங்கட்கிழமை (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின்போது, இடைக்கால மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தங்களது சமர்ப்பணங்களை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, குறித்த மனு மீதான மேலதிக விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் எனக் கோரி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த இடையீட்டு மனு மற்றும் ஒரு சில தரப்பினரால் சலேவுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு ஆகியன இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.




