ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை சட்ட அதிகாரி ஒருவர், எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த செவ்வாய்க்கிழமை (21) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைதான நபர், சட்ட அதிகாரியாக பணியாற்றிய காலத்தில், சுகாதார அமைச்சிற்கு வாடகைக்கு வழங்கப்பட்ட ‘மெடி ஹவுஸ்’ கட்டடத்தின் வாடகைக் காலத்தை நீட்டிப்பதற்காக மூன்று குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்துள்ளார்.
இந்த ஒப்பந்தங்களைத் தயாரிப்பதற்கான கட்டணமாக அவர் 4,134,887 ரூபாய் கோரியதாகக் கூறப்படுகிறது. அதில் 2,000,000 ரூபாயை அவர் முன்பணமாகப் பெற்றுக்கொண்டதுடன், மீதித் தொகையையும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எஞ்சிய தொகையிலிருந்து, ‘மெடி ஹவுஸ் பிரைவேட் கம்பெனி’ என்ற பெயரிலான மக்கள் வங்கிக் கணக்கொன்றில் வழங்கப்பட்ட 500,000 ரூபாய் பெறுமதியான காசோலையை சந்தேக நபர் பணமாக மாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேக நபரை கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, அவரை மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.



