சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை இராணுவமயமாக்கப்படுவதை எதிர்த்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டம்

1990 என்னும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையின் நிர்வாகம் இராணுவமயமாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனைத் தொடர்ந்து அரச சேவையாக சுகாதார அமைச்சுடன் இணைந்ததாக முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தியும் வியாழக்கிழமை (4) ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் வியாழக்கிழமை (4) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரச சேவையாகச் சுகாதார அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் நிலையில், அதன் நிர்வாகத்தைக் கடற்படையிடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, அச்சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 400 போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைத் தொடர்பிலும் அரசாங்கம் தமக்குத்ர்வினைப் பெற்றுத்தருமாறும் போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பிரச்சினைத் தொடர்பில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருடன் கலந்துரையாடுவதற்கு 6 பேருக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடியதை அடுத்து, அப்பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அவசர சேவை தொழில்நுட்ப அதிகாரி மெண்டிஸ் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“2016ஆம் ஆண்டு முதல் இந்நாட்டில் ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, சுமார் 10 வருடங்களுக்கும் அதிக காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம். எமது சேவையில் நிரந்தர நியமனங்கள், பணியிட மாற்றங்கள் தொடர்பில் ஆரம்பகாலம் முதல் பல்வேறு சிக்கல்கள் எழுந்தபோதும் நோயாளர்களைக் கருத்திற்கொண்டு கடமையில் ஈடுபட்டு வருகிறோம்.

எனினும், இதுவரை காலமும் அரச சேவையாக உள்வாங்கப்பட்டுச் சுகாதார அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட்டு வந்த இந்த சேவையை ஒருபோதும் இராணுவமயமாக்கலுக்கு அனுமதிக்க முடியாது. இதன் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அதனை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகையால், தொடர்ந்து இந்த சேவை சுகாதார அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்கும் நோக்குடன் வருகை தந்துள்ளோம்” என்றார்.