முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏ.ஜி. பேரறிவாளன், இன்று முறைப்படி வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார்.
எந்த நீதிமன்றப் படிகளில் மூன்று தசாப்தங்களாகத் தனக்கான நீதிக்காகக் காத்திருந்தாரோ, அதே சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அவர் கருப்பு அங்கி அணிந்து வழக்கறிஞராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளன், தனது சிறை வாசத்தின் போது கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். சிறையிலிருந்தபடியே 10, 12-ஆம் வகுப்புகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அவர், பின்னர் முதுகலை படிப்பை (MCA) முடித்தார்.
தொடர்ந்து, சட்டப் படிப்பின் மீது ஆர்வம் கொண்ட அவர், ஜாமீனில் இருந்த காலத்திலும் விடுதலையான பின்னரும் தனது சட்டப் படிப்பை (LLB) முழுமையாக நிறைவு செய்தார்.கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரமான 142-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்தது.
விடுதலையான பின் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி Bar Council ல் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளார்.
“குற்றவாளியாக நின்ற அதே இடத்தில், இன்று நீதியை நிலைநாட்டும் வழக்கறிஞராகப் பேரறிவாளன் உயர்ந்திருப்பது ஒரு வரலாற்றுத் தருணம்” எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதன் மூலம் அவர் தனது நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.





