மேற்காசியாவில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆசியக் கடல் பகுதிகளில் பயணித்த ஈரானியக் கொடியுடன் கூடிய மூன்று பிரம்மாண்ட மசகு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் தடுத்து நிறுத்திச் சிறைபிடித்துள்ளதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சுமார் 20 இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெயுடன் தென்னிந்தியக் கடற்கரை அருகே சென்றுகொண்டிருந்த இந்த டொரேனா சூப்பர் டேங்கர் கப்பலை அமெரிக்க கடற்படை வழிமறித்தது. இது தற்போது அமெரிக்கப் போர் கப்பலின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மலேசியக் கடற்கரை அருகே கடைசியாகக் காணப்பட்ட டீப் சீ கப்பலும் அமெரிக்காவால் திசை திருப்பப்பட்டுள்ளது.
10 இலட்சம் பீப்பாய் எண்ணெய் கொள்ளளவு கொண்ட செவின் கப்பலும் ஆசியக் கடல் பகுதியில் வைத்துச் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு மலேசியக் கடற்கரைக்கு அப்பால் இந்தக் கப்பல் கடைசியாகக் காணப்பட்டதாகக் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனை தவிர, இந்தியாவிற்கு எண்ணெய் கொண்டு வந்த ‘டெர்யா’ என்ற கப்பலும் அமெரிக்காவின் பிடியில் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 29 கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு சரக்குக் கப்பல்களைத் துப்பாக்கிச் சூடு நடத்தி ஈரான் சிறைபிடித்தது. இது போர் ஆரம்பித்த பின்னர் ஈரான் செய்த முதல் கடத்தல் நடவடிக்கையாகும்.
இலங்கை, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு அருகாமையில் இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் நடப்பது ஆசிய நாடுகளின் கடல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், உலகின் ஐந்தில் ஒரு பங்கு எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.



