உலகப் புகழ்பெற்ற டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு பலமடங்கு அதிகரித்ததை அடுத்து, அதன் இணை நிறுவனர் ஜாங் யிமிங், இந்தியாவின் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரும் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
அதேவேளை, பைட் டான்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும் இவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் சமீபத்திய தரவுகளின்படி, ஜாங் யிமிங்கின் சொத்து மதிப்பு 92.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்து, அவரைச் சீனாவின் ஆகப்பபெரும் கோடீஸ்வரராக மாற்றியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புளூம்பெர்க் இவரின் சொத்துக்களைக் கண்காணிக்க ஆரம்பித்த போது, இவரின் சொத்து மதிப்பு வெறும் 13 பில்லியன் டொலர்களாக மட்டுமே காணப்பட்டது. தற்போது அது 7 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்த அதிரடி மாற்றத்தால் இந்தியாவின் முகேஷ் அம்பானி 86.9 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் ஆசிய அளவில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். எனினும், இந்தியாவின் கௌதம் அதானி 117.4 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த 2024 இல் டிக்டொக் செயலியைத் தடை செய்யக் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தினால், பைட் டான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் புளூம்பெர்க் 25% அபாயக் தள்ளுபடியைப் பயன்படுத்தியிருந்தது.
எனினும், கடந்த ஜூன் 2 ஆம் திகதியன்று அந்த ஆபத்துக்கான தள்ளுபடி விகிதம் 10% ஆகக் குறைக்கப்பட்டது. பைட் டான்ஸ் நிறுவனம் தனது அமெரிக்க வர்த்தகப் பிரிவின் ஒரு பகுதியை ஒராக்ள், சில்வர் லேக் மற்றும் அபுதாபியின் MGX முதலீட்டு நிறுவனம் உள்ளிட்ட கூட்டமைப்பிற்கு வெற்றிகரமாக மாற்றியதே இதற்குக் காரணமாகும். இதன் மூலம் பல வருடங்களாக நிலவி வந்த தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பைட் டான்ஸ் நிறுவனத்தின் ‘டூபாவ்’ என்ற ஏஐ சாட்பொட் மாதாந்தம் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்று அந்நாட்டின் மிகவும் பிரபலமான ஏஐ செயலியாக மாறியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் பைட் டான்ஸ் நிறுவனம் ஈட்டிய சுமார் 50 பில்லியன் டொலர் இலாபத்தைக் கொண்டு, இந்த ஆண்டில் மட்டும் செயற்கை நுண்ணறிவு சந்தையை ஆக்கிரமிப்பதற்காக சுமார் 70 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கப் பிடியிலிருந்து விடுபட்டதே பைட் டான்ஸ் நிறுவனத்தின் உண்மையான மதிப்பை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச வர்த்தகப் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




