டெல்லி உணவு விடுதியில் பாரிய தீ! ; 21 பேர் பலி

இந்தியாவின் டெல்லியில் உணவு விடுதியொன்றில் இன்று புதன்கிழமை (3) காலை இடம்பெற்ற தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இழப்பீட்டுத் தொகை உதவிகள் தொடர்பாகவும் அறிவித்திருக்கிறார்.

மாளவியா நகரில் உள்ள உணவு விடுதியில் இன்று காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் விரைந்து செயற்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கி காயமடைந்த 37 பேர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக இந்த தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

உயிரிழந்தவர்களில் மத்திய ஆசியா, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்குவார்கள்” என மோடி பதிவிட்டுள்ளார்.

அதன்படி, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.