சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் வணிக மதிப்பீட்டைச் செய்வதற்கு நடவடிக்கை

60 ஆண்டுகள் பழமையான சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்கி, அதன் உற்பத்தித் திறனை விரிவாக்கம் செய்வதற்கு முன்னதாக, அதன் முழுமையான வணிகப் பெறுமதியை கணிப்பிடுவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு சர்வதேச நிறுவனங்களிடம் இலங்கைப் பெற்றோலிக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கான கேள்விப்பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 2026 ஜூன் 15 ஆம் திகதியுடன் காலஎல்லை நிறைவடையவுள்ளது.

தற்போது நாளொன்றுக்கு 50,000 பீப்பாய்களைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்நிலையத்தை, அதிகரித்து வரும் எரிபொருள் தேவை மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் தரங்களுக்கு அமைவாக 100,000 பீப்பாய்களாக அதிகரிப்பதே இந்த விரிவாக்கத் திட்டத்தின் முக்கிய இலக்காக இருப்பதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டு நடவடிக்கையானது நிலையத்தின் பௌதீக சொத்துக்கள், நிதிச் செயற்பாடு மற்றும் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களுக்கான வெளிப்படையான அடித்தளத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை சீனக்குடாவில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கித் தளத்தில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள 24 தாங்கிகளில், நான்கு தாங்கிகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்தத் தாங்கிகள் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அவற்றின் அடிப்பகுதி மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சீர்செய்யும் பணிகள் 180 நாட்களுக்குள் முடிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை வரை 12.78 பில்லியன் ரூபா செலவில் புதிய எரிபொருள் விநியோகக் குழாய் பாதையை அமைப்பதற்கான சர்வதேச கேள்விப்பத்திரத்தைக் கோருவதற்கான நடைமுறைகளும், முத்துராஜவெல மற்றும் கொலன்னாவை பகுதிகளில் புதிய சேமிப்புத் தாங்கிகளை நிர்மாணிக்கும் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.