ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய வீரர், வீராங்கனைக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரூ.5.80 லட்சம் நிதி வழங்கினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து சாதனையாளர்களாக மாற்ற தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் காது கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சமீஹா பர்வீன் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற நீச்சல் வீரர் அபிஷேக் ஆகியோர் நிதி உதவி கோரியிருந்தனர்.
இவர்கள் பல்வேறு பயிற்சிப் போட்டிகளில் கலந்துகொள்ளவும், தேவையான உபகரணங்களை வாங்கவும், ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கு உதவும் வகையிலும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் சமீஹா பர்வீனுக்கு ரூ. 3 லட்சம், அபிஷேக்குக்கு ரூ.2.80 லட்சம் வழங்கப்பட்டது.
விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான கோரிக்கைகள் குறித்து விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்க நிர்வாகிகள் எவ்வித சிரமமுமின்றி நாள்தோறும் காலை 7 மணிமுதல் 10 மணிவரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் என்னைச் சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான மனுக்களின் மீது விளையாட்டுத் துறை அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.



