அரச சுகாதாரத் துறையில் கதிரியக்கச் சிகிச்சை சேவைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் காரணமாக சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகள் அத்தியாவசிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாக சுகாதாரத் தொழில் வல்லுநர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில்,
கதிரியக்கச் சிகிச்சைத் திட்டமிடலுக்குப் பயன்படுத்தப்படும் பழைய ‘சிடி சிமுலேஷன்’ (CT Simulation) இயந்திரம் கடந்த ஏப்ரல் 29 அன்று செயலிழந்த நிலையில் மே 21ஆம் திகதியளவில் புதிய ‘சிடி சிமுலேஷன்’ இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்ட போதிலும், அந்த இயந்திரம் நிறுவப்பட்ட கட்டடத்தின் கூரையிலிருந்து நீர் கசிந்ததன் காரணமாக அது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
ஜூன் முதலாம் திகதியளவில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டபோதிலும், இந்த இயந்திரம் இன்னும் நோயாளிகளின் சிகிச்சைக்காகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. கதிரியக்கச் சிகிச்சைக்கு முந்தைய மிக முக்கியமான ஒரு செயல்முறையே ‘சிடி சிமுலேஷன்’ ஆகும்.
இது மருத்துவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதியை துல்லியமாகக் கண்டறியவும், கதிரியக்கக் கதிர்களின் திசைகளைத் தீர்மானிக்கவும், சிகிச்சைக்கான கோணங்களைத் திட்டமிடவும், கதிரியக்க அளவைக் கணக்கிடவும் மற்றும் ஆரோக்கியமான திசுக்களுக்குத் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
‘சிடி சிமுலேஷன்’ செயல்முறை இல்லாமல் கதிரியக்கச் சிகிச்சையைத் தொடங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது என்பதால், புற்றுநோய் சிகிச்சையின் முக்கியமான கட்டத்தில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
அவசர சந்தர்ப்பங்களுக்காக தற்போது ‘பி.ஈ.டி-சிடி’ (PET-CT) இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், அது ‘சிடி சிமுலேஷன்’ நோக்கத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்படாததால், பதிலீடான அதற்கு தீர்வாகாது.
இந்தத் தாமதம் காரணமாக ஏற்கனவே கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் இதர சிகிச்சைகளை முடித்த நோயாளிகள் காத்திருப்புப் பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
கதிரியக்கச் சிகிச்சை தள்ளிப்போடப்படுவதால், அவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் தீவிரமடையும் அபாயம் அதிகரித்துள்ளது.
மகரகம, கொழும்பு, கண்டி, காலி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மத்திய நிலையங்களில் மாத்திரமே கதிரியக்கச் சிகிச்சை வசதிகள் உள்ளன. எனவே ஒரு மத்திய நிலையத்தில் ஏற்படும் தாமதம் நாடு முழுவதிலும் உள்ள நோயாளிகளைப் பாதிக்கும் என்றார்.




