சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா வழக்கை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்:

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வார காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்’ என சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளதாக வருமான வரித் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை, எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. சிறப்பு நீதிமன்றத்தில் மனு இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காத பலர் நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை சிபிஐ தரப்பு சாட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அல்லது அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கோரிக்கையை ஏற்க மறுப்பு: இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, ஜார்ஜ் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘குட்கா முறைகேடு வழக்கில் மொத்தம் 278 சாட்சிகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சில சாட்சிகளின் வாக்குமூலங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.

பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மனுதாரருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்பதால் மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த குட்கா முறைகேடு வழக்கை சிறப்பு நீதிமன்றம் 12 வார காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்