கொழும்பு கடலில் வீழ்ந்த கொள்கலன் ஒன்று இந்துருவையில் கரையொதுங்கியது!

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் பயணித்த வணிகக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த 17 வெற்றுக் கொள்கலன்களில் ஒன்று, பெந்தோட்டை – இந்துருவை, அதுருவெல்ல கடற்கரையில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றிற்குப் பின்னால் ஞாயிற்றுக்கிழமை (2) காலை கரையொதுங்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் கடற்சார்புப் பிரிவுகளுக்கு அறிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை கரையொதுங்கியுள்ள கொள்கலன் அருகே பொதுமக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நிலவும் காற்று மற்றும் கடல் நீரோட்டத்தின் திசைக்கு ஏற்ப, எஞ்சிய வெற்றுக் கொள்கலன்கள் சிலாபம், நீர்கொழும்பு, பேருவளை வழியாகக் காலி வரையான கடற்கரைப் பகுதிகளை நோக்கி மிதந்துவர அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கொள்கலன்கள் படகுகளுடன் மோதினால் பாரிய விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், கொழும்பிலிருந்து காலி வரையிலான தெற்கு கடற்பகுதியில் பயணிக்கும் அனைத்து மீன்பிடிப் படகுகளும் தீவிர அவதானத்துடன் இருக்குமாறு கடற்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், கடலில் மிதக்கும் கொள்கலன்கள் தென்பட்டால் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்தின் வானொலித் தொடர்பாடல் மையங்களுக்கும் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.