புத்தாண்டு காலத்தில் அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரிசி தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்வோருக்கு மலிவு விலையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடு என்ற ரீதியில் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்பை மனதில் கொண்டு ஒன்றுபட வேண்டும்.
நாட்டினது முன்னோக்கிய அபிவிருத்தியில் கிராமங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இந்நாட்டு மக்கள் வாழ்வதே சவாலாக உள்ள வேளையில் அவர்களது நலனுக்காக உழைப்பது அனைவரதும் கடமையாகும்.
தற்போது நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் வேளையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்கள் மீதுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டினால் மக்கள் அசௌகரியமடைந்துள்ளனர். புத்தாண்டு காலத்தில் அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அரிசி தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்வோருக்கு மலிவு விலையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும்.
நாட்டு மக்கள் அரிசியின்றி இருக்கும் தருணத்தில், தமது விளைபொருட்களுக்கு நிலையான விலை கிடைக்காததால் விவசாயிகள் மேலுமொருவகையில் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர்.
அரசாங்கம் இதுவரை எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. வாய் பேச்சோடு நிற்கின்றனர். நடவடிக்கைகள் ஏதும் இல்லை. ஒரு பக்கம் விவசாயிகளை பாதுகாத்து கொண்டு மறுபக்கம் நுகர்வோரையும் பாதுகாக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை வெகுவாக எழுந்துள்ளது.
நாட்டு மக்களுக்கு முன்வைத்த தேர்தல் கொள்கை பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தருணம் தாராளமாக கிடைத்துள்ளது. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை வேண்டும் என்றார்.



