வடக்கு மாகாணத்தில் கடமை நேரத்தில் ஒழுக்க விதிகளை மீறி இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனருடன் முரண்பட்டுத் தரக் குறைவாக நடந்துகொண்ட தனியார் பேருந்து நடத்துனருக்கு மறு அறிவித்தல் வரை பணித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரும், பொறியியலாளருமான சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த குறித்த சம்பவத்தின் போது கடமையிலிருந்த தனியார் பேருந்து நடத்துனர் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து நடத்துனரை நோக்கித் தரக் குறைவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பான காணொளி ஆதாரங்கள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிடைக்கப் பெற்ற காணொளி ஆதாரங்களை ஆராய்ந்ததில் சம்பந்தப்பட்ட நபர் ஒரு பேருந்து நடத்துனருக்குரிய அடிப்படை ஒழுக்கத்தைப் பேணத் தவறியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த நபர் வடக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு பயணிகள் பேருந்திலும் நடத்துனராகப் பணியாற்றுவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளுடனும், ஏனைய போக்குவரத்துச் சேவையாளர்களுடனும் கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறான ஒழுக்கமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகப் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் மற்றும் பணித் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதேவேளை, பொதுப் போக்குவரத்தின் போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் வேண்டுமென்றே ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது முறைகேடுகள் இடம்பெற்றாலோ பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப் படங்கள் அல்லது காணொளிகள்) வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 0719090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





