ஊக்கமருந்தினை கையாளல், விதிவிலக்கு நிலைகள் தொடர்பாக இலங்கை அரசினால் கடந்த 2026.01.16 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2471/51ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிழைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த அதிவிசேட வர்த்தமானியில் உள்ள பிழைகளைத் திருத்தம் செய்யுமாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகேயிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ரவிகரன், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்திலேயே ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில் 2471/51ஆம் இலக்க வர்த்தமானியில் உள்ள பிழைகள் தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கடந்த 2026.01.16 அன்று வெளியிடப்பட்ட 2471/51ஆம் இலக்க வர்த்தமானியில் இடம்பெற்றுள்ள மொழிபெயர்ப்புப் பிழைகள் மற்றும் திருத்தப்படவேண்டிய உள்ளடக்கங்களுக்குரிய எமது திருத்த முன்மொழிவுகள் தொடர்பாக தங்களின் மேலான கவனத்தை செலுத்துமாறு கோருகிறேன்.
மேலும், மேற்படி வர்த்தமானிகளில் காணப்படும் பக்க வடிவமைப்பு, ஒழுங்கமைத்தல், நிறுத்தக்குறிகள் சார்ந்தும் மும்மொழிகளுக்கு இடையிலான சீரற்ற தன்மைகள் தொடர்பாகவும் தங்களின் கவனத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
விளையாட்டில் தடைசெய்யப்பட்ட ஊக்குப்பதார்த்த பட்டியல்களிலும் வரையறைகளிலும் காணப்படும் மொழிபெயர்ப்புத் தவறுகளும் தெளிவற்ற மொழிபெயர்ப்பும் விளையாட்டுவீரர்களை மொழியின் அடிப்படையில் பாரபட்ச அணுகலுக்கு வழிகோலும் என்பதால் மேற்படி விடயம் மிகுந்த முக்கியத்துவத்துடன் பரிசீலிக்கப்படவேண்டியுள்ளது.
எனவே குறித்த வர்த்தமானி முழுமையாக மீளாய்வு செய்யப்படுவதோடு திருத்தப்பட்டு சட்ட ரீதியாக சரிபார்க்கப்பட்ட பதிப்பு விரைவாக மீள வெளியிடப்படவேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய பிழைகள் ஏற்படாமல் தடுக்க உரிய சோதனை மற்றும் சரிபார்ப்பு முறைமைகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்றும் தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தின் மூலம் ரவிகரன் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில் ஆங்கில மொழிமூலமான வர்த்தமானியில் 14 பிழைகள் காணப்படுவதாகவும், தமிழ்மொழி மூலமான வர்த்தமானியில் 10 பிழைகள் காணப்படுவதாகவும் ரவிகரனால் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், வர்த்தமானியில் திருத்தம் செய்யப்படவேண்டிய பகுதிகளும் அக்கடிதத்துடன் இணைப்பு செய்யப்பட்டுள்ன.
மேலும் கடந்த 07.04.2026ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெற்ற விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாத்தில் பங்கேற்று, கருத்துத் தெரிவிக்கும்போதும் குறித்த வர்த்தமானியில் உள்ள பிழைகளைத் திருத்தம் செய்யுமாறு, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாகவே விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருக்கு ரவிகரன் மேற்குறிப்பிட்ட கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
அதேவேளை குறித்த கடிதமானது விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், இலங்கை ஊக்கப் பதார்த்தத்துக்கு எதிரான முகவராண்மையின் பணிப்பாளர் நாயகம், அதிகாரபூர்வ மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.











