03.05.2026 ஞாயிற்றுக்கிழமை வூப்பெற்றால் ஶ்ரீநவதுர்க்காதேவி ஆலய மண்டபத்தில் தமிழர் கலைபண்பாட்டுக்கழக யேர்மனிக்கிளையின் ஏற்பாட்டில் விடுதலை கானம்பாடி பாடற்போட்டி நிகழ்வானது, பாசறைப்பாணர் மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கான வணக்கத்துடன் தொடங்கப்பட்டது.
யேர்மனியில் வளர்ந்து வரும் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் வகையில் பலவருடங்களிற்கு மேலாக தொடர்ச்சியாக இப்பாடற்போட்டியானது நடாத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்கள் ஒலிவடிவிலான பின்னனி இசையுடன் பாடப்பட்டு வந்த கானம்பாடி நிகழ்வானது, இந்த ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்று, புதுப்பொலிவுடன் நேரடியான பக்கவாத்திய இசைக்கருவிகளோடு போட்டியாளர்கள் பாடக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் “தமிழீழம்” இசைக்குழுவின் இசைகலைஞர்கள் இசைவழங்க போட்டியாளர்கள் தங்கள் போட்டிகளுக்கான பாடல்களை சிறப்பாக பாடினார்கள். ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு,
அதிமேற்பிரிவு என 5 பிரிவுகளாகப் போட்டிகள் நடாத்தப்பட்டன. இப்போட்டிக்கான நடுவர்களாக பிரான்சு நாட்டிலிருந்து கலையியல் இளையர் இசைமணி திருமதி. தேவமாலா அன்ரன் லியோன் அவர்களும் சங்கீத ரத்னா , Diploma கலாஷேத்ரா திருமதி. ஷைலஜா இராசலிங்கம் அவர்களும் சங்கீத வித்வான்- இசைக்கலைமணி திருமதி. அன்ரன் நொயலா ஆகியோரும் வருகைதந்து சிறப்பித்தனர்.
அன்றைய நிகழ்விற்கான பொதுச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலம் 2இன் பொறுப்பாளர் திரு: சதாசிவம் சிறிகந்தவேல் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் துணைப்பொறுப்பாளர் திரு. ஜெயசங்கர் சுப்பிரமணியம் அவர்கள் ஏற்றிவைத்தார். மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் திருவுருவப் படத்திற்கான மலர்மாலையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலம் 1 இன் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன் மற்றும் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் செல்வி: ரோசிகா ரவிக்குமார் ஆகியோர் அணிவித்தனர். அதனைத்தொடர்ந்து அங்கு நிறைந்திருந்த மக்களால் மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர், சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.
பின்னர் விடுதலை கானம்பாடி நிகழ்விற்கான மங்கலவிளக்கினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனிக்கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திநாதன் அவர்களுடன் விடுதலை கானம்பாடி நடுவர்கள், மற்றும் தமிழர் கலைபண்பாட்டுக்கழகச் செயற்பாட்டாளர்களும் இணைந்து ஏற்றிவைத்துச் சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து அகவணக்கத்தோடு மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவுப்பாடல் தமிழீழம் இசைக்குழுவின் பொறுப்பாளர். ஏழிசைவேந்தன் , மதுரக்குரலோன் திரு. எஸ் கண்ணன் அவர்களால் பாடப்பட்டு, போட்டிகள் தொடங்கிவைக்கப்பட்டன. இவற்றின் இடையிடையே தமிழர் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியர்களின் மாணவர்களின் நடனங்கள் இடம்பெற்றன. நிகழ்வின் சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனிக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் வழங்கினார்.
போட்டியில் பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழ்களும் நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டதோடு,நிறைவாக போட்டியில் முதல் 3 நிலைகளைப் பெற்றுக்கொண்ட வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வின் நிறைவாக நன்றியுரை இடம்பெற்று, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் இசைக்கப்பட்டு எமது தாரக மந்திரத்தோடு நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.






