செம்மணியின் பல பகுதிகளிலும் மனிதப் புதைகுழிகள்: வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தினர் கடும் அச்சம்!

யுத்தம் நடந்த கடந்த காலங்களில் செம்மணி முழுவதும் பலர் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாக கிரிசாந்தி குமாரசுவாமி என்ற பாடசாலைச் சிறுமியின் கொலை தொடர்பாக நீதிமன்றங்களில் இடம்பெற்ற வழக்குகளில் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆணைக் குழுக்களுக்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் அகழ்வு நடவடிக்கை ஒரு தனிப்பட்ட சம்பவமாக அல்லாமல் பெருமளவிலான அட்டுழியங்கள் இடம்பெற்ற தரவுகளை வெளிக்கொண்டு வரும் முக்கியமான வழியாகக் காணப்பட வேண்டும். செம்மணியின் பல பகுதிகளில் இவ்வாறு வெவ்வேறு மனிதப் புதைகுழிகள் இருக்கலாமென நாம் நம்புகின்றோம் என வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தினர் கடும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அரியாலை செம்மணி சித்துபாத்தி இந்துமயானத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேசத்தின் கண்காணிப்புடனும், சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்திக் கவனயீர்ப்புப் போராட்டம்   வியாழக்கிழமை (05.06.2025) யாழ்ப்பாணம் செம்மணி நுழைவாயிலுக்கு அருகில் வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட போது கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தற்போதுவரை யாழ்ப்பாணம் சிந்துபாத்தி இந்துமயானத்தில் மீட்கப்பட்ட அல்லது அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 14 ஐ தாண்டியுள்ளது. இதில் சிறு குழந்தைகளின் உடலின் எச்சங்களும் அடங்குவதாக அறிகிறோம். மிகவும் கொடூரமான முறையில் ஒன்றின் மீது ஒன்றாகப் பலர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதை இந்தப் புதைகுழி அகழ்வு வெளிப்படுத்தி நிற்கின்றது. ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்படும் போது அந்த இடம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப மனிதப் புதைகுழியென அடையாளப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

எனவே, செம்மணி சிந்துபாத்தி இந்துமயான அகழ்விடத்தினை உடனடியாக ஒரு மனிதப் புதைகுழியாகப் பிரகடனம் செய்யுமாறும், அதனடிப்படையில் அகழ்வுப் பணிகளை மேற்படி மயான வளாகம் முழுவதிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விரிவுபடுத்துமாறும் நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம். இந்த அகழ்வு நடவடிக்கையை மனிதப் புதைகுழி விசாரணை என அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி நிற்கின்றோம் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.