மாகாணசபை தேர்தல் விவகாரம்: வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி!

பொதுமக்களின் வாக்குரிமை, அரசியலமைப்பின் ஊடாக நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்களின் இயங்குகை மற்றும் இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் ஓரங்கமாகக் காணப்படும் அரசியல் தீர்வு என்பவற்றில் நேரடியாகத் தாக்கம் செலுத்தக்கூடிய மாகாணசபைத்தேர்தல் விவகாரம் தொடர்பில் அரசின் முறையான கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட, ஒரு கட்சியின் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டமையானது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக ஆட்சி நிர்வாகம் குறித்து கேள்விகளைத் தோற்றுவித்திருப்பதாகவும், கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான எல்லைக்கோடு மங்கலாகி வருவதைக் காண்பிப்பதாகவும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கரிசனை வெளியிட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போதைய அரசாங்கம் உள்ளடங்கலாக நாட்டின் தொடர்ந்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதாக பகிரங்கமாகவும், தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாகவும் உறுதியளித்த போதிலும், அவ்வாக்குறுதிக்கு அமைவாக தேர்தலை நடாத்தத் தவறியமை குறித்து நாம் மிகுந்த கவலையடைகிறோம். மாகாணசபைத்தேர்தல்கள்  கடைசியாக 2014 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. மாகாணசபைகளுக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் இருப்பது நாட்டின் அதிகாரப்பகிர்வு நிர்வாகக்கட்டமைப்பை வெகுவாகப் பாதித்திருப்பதுடன், நாட்டுமக்களின் ஜனநாயக உரிமைகளையும் புறந்தள்ளயிருக்கிறது.

இந்நெருக்கடியின் மையப்புள்ளி 2017 ஆம் ஆண்டின் மாகாணசபைத்தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்திலிருந்து உருவானதாகும். இதில் புதிய தேர்தல் முறைமை மாற்றம் மற்றும் எல்லை நிர்ணயம் என்பன உள்ளடங்குகின்றன. மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதில் சவால்கள் காணப்படுகின்ற போதிலும், அவற்றைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், தேர்தலை தாமதப்படுத்துவதற்கான நியாயப்பாடாக அது பயன்படுத்தப்படுகிறது. இவ்விவகாரம் அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தினால் தீர்ப்படவேண்டிய பிரச்சினையாகும்.

ஜனநாயக மறுமலர்ச்சி மற்றும் பொறுப்புக்கூறல் எனும் கொள்கைகளை முன்னிறுத்தி ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதற்கு இடையூறாக இருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியமை ஏமாற்றமளிக்கிறது. அரசாங்கத்தின் இந்தப் போக்கு முன்னைய அரசாங்கங்களின் நடவடிக்கைகளைப் பிரதிபலிப்பதுடன், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் விருப்பம் குறித்துப் பல்வேறு கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி மாகாணசபைத்தேர்தலை ஒத்திவைத்தல் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடானது உரிய விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படாமல், ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டமை மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும்.

பொதுமக்களின் வாக்குரிமை, அரசியலமைப்பின் ஊடாக நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்களின் இயங்குகை மற்றும் இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் ஓரங்கமாகக் காணப்படும் அரசியல் தீர்வு என்பவற்றில் நேரடியாகத் தாக்கம் செலுத்தக்கூடிய இம்முக்கிய கொள்கை விடயம் தொடர்பில் அரசின் முறையான கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட, ஒரு கட்சியின் அதிகாரி அறிவிப்பது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக ஆட்சி நிர்வாகம் குறித்து கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இது கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான எல்லைக்கோடு மங்கலாகி வருவதைக் காண்பிப்பதுடன், நிறைவேற்றதிகாரம் உண்மையில் எங்கு நிலைகொண்டிருக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் தேர்தல் முறைமை தொடர்பான சட்டத் தெளிவற்ற நிலையைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்ல், எல்லை நிர்ணய செயன்முறையை அல்லது மாற்றுச் சட்ட ஏற்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான கால வரையறையுடன்கூடிய திட்டத்தைத் தயாரித்தல், உத்தியோகபூர்வக் கொள்கைகள் அரசியலமைப்பு ரீதியாகப் பொறுப்புக்கூறவேண்டிய அதிகாரிகளால் மாத்திரம் அறிவிக்கப்படுவதை உறுதிப்படுத்தல், தாமதமின்றி மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதற்கான வாக்குறுதியை மீளுறுதிப்படுத்தல் ஆகிய நடவடிக்கைளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.