நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) கைதியொருவர் உயிர்மாய்க்க முற்பட்டவேளை சிறைச்சாலை உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் இணைந்து காப்பாற்றியதையடுத்து, அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவருக்கு எதிரான வழக்கு நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குற்றவாளி கூண்டிலிருந்து உயர் நீதிமன்றத்தில் உள்ள சிறை அறைக்கு செல்லும் வழியில் கைதி தன்வசம் வைத்திருந்த நஞ்சினை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், அதனைக் கண்ட சிறைச்சாலை அதிகாரிகள், கைதியை மீட்டு, வைத்தியசாலைக்கு கொண்டுசென்றதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சிறைக் கைதி தொடர்பில் நுவரெலியா தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.




