வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்களின் வரிப்பணத்தை முறையற்ற வகையில் கையாள்வதைத் தடுக்கும் நோக்கில் சர்ச்சைக்குரிய வேலைத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறும், சட்டவிரோத வரி அறவீடுகளைக் கைவிடுமாறும் வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகர சபையின் நிர்வாகச் சீரின்மை, அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் தூர்வாருதலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆழமாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கந்தையா அரியநாயகம் தனிநபர் விசாரணை ஆணைக்குழுவாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த விசாரணை ஆணைக் குழுவின் விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கட்டளையிட்டுள்ளார்.




