இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 07 வயது சிறுவன் இஷாங்க் சிங், இந்தியா – இலங்கை இடையிலான 29 கிலோமீட்டர் தொலைவு கொண்ட பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
தலைமன்னார் கடற்கரையில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி அதிகாலை 4:00 மணியளவில் தனது பயணத்தை ஆரம்பித்த இஷாங்க், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலைகளின் சவால்களை முறியடித்து, பிற்பகல் 1:50 மணியளவில் இந்தியாவின் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளார்.
9 மணித்தியாலங்கள் 50 நிமிடங்களில் 29 கிலோ மீற்றரை கடந்து சென்றுள்ளார்.
இதன் மூலம் பாக்கு நீரிணையை மிகக் குறைந்த வயதில் மற்றும் அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற இரட்டைச் சாதனையை அவர் படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சாதனையை அங்கீகரித்து யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஃபோரம் அவருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.
ராஞ்சியில் உள்ள ஜவஹர் வித்யா மந்திர் பாடசாலையில் 3-ம் வகுப்பு பயிலும் இஷாங்க், தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் திறந்தவெளி நீச்சல் அகாடமியில் இதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளார்.
இந்தச் சாதனையைக் கண்டு வியந்த ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்,
“சிறுவன் இஷாங்கின் இந்த வெற்றி, அவனது தளராத அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்திற்குச் சான்றாகும். அவன் ஜார்கண்ட் மாநிலத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கே பெருமை சேர்த்துள்ளான்,” எனப் பாராட்டியுள்ளார்.
முன்னதாக, 2019-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஜெய் ஜஸ்வந்த் (10 வயது) படைத்த சாதனையை, தற்போது 7 வயதிலேயே முறியடித்து இஷாங்க் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.





