என்னை சிறைக்கு அனுப்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகிறார். நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் அரசாங்கத்தின் அமைச்சர்கள் தீர்ப்பினை முன்கூட்டியதாகவே குறிப்பிடுகிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா, ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் நீதிபதிகள் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்புக்கோர வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பணி நீக்கப்பட்ட திறைசேரியின் மேலதிக பணிப்பாளர் உயிரிழந்துள்ளார். அது தற்கொலை என்று தற்போது குறிப்பிடப்படுகிறது.
இந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் அரச உத்தியோகத்தர்கள் தான் பலியாகிறார்கள். அமைச்சரவை எடுத்த தீர்மானங்களினால் அரச உத்தியோகத்தர்கள் தான் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தீர்மானம் எடுத்த அமைச்சரவை உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
இந்த மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பற்றி ஆளும் தரப்பும் பேசுவதில்லை. எதிர்க்கட்சியும் பேசுவதில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார நிபுணரான ஹர்ஷ டி சில்வாவும் இதைப்பற்றி பேசுவதில்லை.
கடந்த ஆண்டு செப்டெம்பர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு கடன்களை செலுத்தும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கியின் வசமே காணப்பட்டது. இந்த காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுநரின் அனுமதியுடன் தான் அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு கட்டம் கட்டமாக 7 கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன.
2.5 மில்லியன் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவையும் விசாரிக்க வேண்டும். அவருக்கு மாத்திரம் ஏன் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
மே தின கூட்டத்தில் அரசாங்கத்தின் வன்மம் வெளிப்பட்டது. ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் அனைவரும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களையும், அரசியல் பிரதிவாதிகளையும் இந்த ஆண்டு சிறைக்கு அனுப்புவதாக குறிப்பிட்டார்கள்.
என்னை சிறைக்கு அனுப்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகிறார். ஆனால் நான் இதுவரையில் எந்த வழக்குக்கும் முன்னிலையாகவில்லை. நீதிபதிகள் முன்னிலையில் சாட்சியமளிக்கவுமில்லை. அவ்வாறான நிலையில் எவ்வாறு பிமல் ரத்நாயக்க தான் தற்போது நீதிபதி அவர் தான் வழக்குகளை விசாரிக்கிறார்.
நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் அரசாங்கத்தின் அமைச்சர்கள் தீர்ப்பினை முன்கூட்டியதாகவே குறிப்பிடுகிறார்கள்.இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா, ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் நீதிபதிகள் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்புக்கோர வேண்டும் என்றார.




