சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி

ஜப்பானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கிருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்துக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தியான்ஜின் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாட்டுக்கு இடையே ஜின்பிங்கையும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசுவார். அப்போது இந்திய-சீனா-ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு குறித்தும், உறவு குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.

முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு சீனாவில் நடந்த மாநாட்டில் இந்தியபிரதமர் மோடி கலந்து கொண்டார். இதையடுத்து 2019-ம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜின்பிங் இந்தியா வந்தார். அதன் பின்னர் இந்திய பிரதமர் மோடி சீனா செல்லவில்லை. இதனிடையே 2020-ம் ஆண்டு கல்வான் பகுதியில் சீனா-இந்தியா இடையே நடந்த தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் மோடி, சீனாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதித்துள்ள நிலையில் ரஷ்ய, சீன, இந்திய தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி பேசுவதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான புதிய வியூகம் ஒன்றை வகுக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.