அமைச்சர் குமார ஜயக்கொடியின் இராஜினாமா தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன?

நிலக்கரி கொள்முதல் முறைகேடு தொடர்பான விசாரணைகள் காரணமாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி தனது உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், “ஓர் அமைச்சர் பதவி விலகுவது என்பது குறிப்பிட்ட ஒரு சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாகும். ஆனால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக அமைச்சர் பதவிலகுகிறார் என்பது ஒரு போலியான காரணியாகும். இது விசாரணைகளில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒப்பந்தம் வழங்கப்படும் போது குறித்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள கூட்டு எதிர்க்கட்சி, இந்த தவறான தீர்மானத்திற்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.