ஒற்றையாட்சியை ஒழித்து கூட்டாட்சிக்கு அழுத்தம் கொடு!

இந்தியா தனது வரலாற்றுத் தார்மீகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஒழித்து, தமிழர்களின் தேசம் மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு கூட்டாட்சித் தீர்வை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற அன்னை பூபதியின் நினைவூர்தி படுவான்கரைக்கு வந்ததுடன் அங்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர்,தொடர்ந்து உரையாற்றுகையில்,

அன்னை பூபதியின் நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகிறது. முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எமது தேசத்தின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரைத் தியாகம் செய்ய முன்வந்த அந்த உயர்ந்த தாயின் இலட்சியம் இன்றும் முழுமையாக நிறைவேறவில்லை.

எமது தேசத்தின் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு மற்றும் கௌரவமான வாழ்விற்காகவே அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். இழந்த எமது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை இந்த லட்சியப் பயணம் தொடரும் என்பதை இந்த நினைவேந்தல் நிகழ்வு மீள உறுதிப்படுத்துகிறது.

தனது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த போதிலும், தேசத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 12 நாட்கள் உணவின்றி, வெறும் நீரை மட்டும் அருந்தி அவர் உறுதியுடன் போராடினார்.

தனது இலட்சியத்திற்காக உயிரைத் தியாகம் செய்த அந்தத் தாயை நினைவுகூர வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.இந்தியா இலங்கைக்கு வந்ததன் நோக்கம் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவதாகவே இருந்தது. அதன் அடிப்படையிலேயே இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், ஜே.ஆர். ஜெயவர்த்தன அந்த ஒப்பந்தத்தின் அம்சங்களைப் புறந்தள்ளி, 13ஆம் திருத்தச் சட்டத்தைத் திணித்துத் தமிழர்களை அடிமைப்படுத்தும் செயலை முன்னெடுத்தார்.

தமிழர்கள் அந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை ஓர் அடிமைச் சாசனமாகவே கருதி நிராகரித்தனர். எமது தேசத்தின் இறமை மற்றும் சுயநிர்ணய உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறோம். 38 ஆண்டுகளாகியும் நாம் இன்னும் ஒடுக்குமுறைக்குள்ளேயே வாழ்ந்து வருகிறோம், எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

இந்தியா தனது வரலாற்றுத் தார்மீகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என நாம் இகோருகிறோம். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஒழித்து, தமிழர்களின் தேசம் மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு கூட்டாட்சித் தீர்வை ஏற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.