ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று சனிக்;கிழமை (18) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 757 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 762 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 02 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 385 கிராம் ஹெரோயின், 536 கிராம் ஐஸ், 529 கிராம் கஞ்சா, 135,002 கஞ்சா செடிகள், 13 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 03 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 327 போதை மாத்திரைகள், 49 கிராம் மதனமோதகம் மற்றும் 110 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.





