அமைச்சர் லால்காந்தவின் சொத்து விபரங்கள்: தவறான தகவலைத் திருத்தியது தனியார் ஊடக நிறுவனம்

அமைச்சர் கே.டி. லால்காந்தவின் சொத்து மற்றும் கடன் விபரங்கள் தொடர்பாக அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம்  வெளியிட்ட புள்ளிவிபரங்கள் தவறானவை எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அமைச்சரின் சட்டத்தரணிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, குறித்த ஊடக நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டு பகிரங்கமாகத் திருத்தம் வெளியிட்டுள்ளது.

கடந்த 16-ஆம் திகதி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் அமைச்சர் சமர்ப்பித்த சொத்து விபரங்களை மேற்கோள் காட்டி குறித்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இதன்போது, அமைச்சரின் சொத்து மதிப்பு மற்றும் அவரிடமுள்ள பிணையங்கள்  குறித்து மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தவறான புள்ளிவிபரங்கள் ஒளிபரப்பப்பட்டன.

தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தரவுகள் வெளியிடப்பட்டதைக் கண்டித்த அமைச்சர் லால்காந்த, தனது சட்டத்தரணி ஊடாக குறித்த ஊடக நிறுவனத்திற்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பிள்ளார்.

தவறான கணக்கீடுகளை உடனடியாகத் திருத்தி, உண்மையான விபரங்களை வெளியிடுமாறு அதில் வலியுறுத்தப்பட்டது.

சட்ட ரீதியான அழுத்தத்தையடுத்து, ஊடகங்களுக்குரிய ‘திருத்தம் செய்யும் உரிமையின்’ கீழ் குறித்த நிறுவனம் புதிய விளக்கத்தை அளித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய திருத்தங்கள் பின்வருமாறு:

முன்னதாக 38 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனத் தவறாகக் கணக்கிடப்பட்ட அமைச்சரின் பத்திரங்களின்  உண்மையான பெறுமதி 1,43,475.08 ரூபா மட்டுமே எனத் திருத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் மொத்த சொத்து மதிப்பு 46 கோடி ரூபா என அந்த நிறுவனம் முன்பு செய்தியில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், முறையான கணக்கீட்டின்படி அவரது மொத்த சொத்துக்களின் தோராயமான மதிப்பு 8 கோடி ரூபா என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தவறான கணக்கீடுகளால் அமைச்சர் கே.டி. லால்காந்தவிற்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் மற்றும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு குறித்த ஊடக நிறுவனம் வருத்தத்தைத்  தெரிவிப்பதாக அறிவித்துள்ளது