தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறையாக வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தேர்தலில் தோல்வியடைந்தது திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது எடப்பாடி தொகுதியில் வெற்றியை தக்கவைத்துக் கொண்டுள்ளார். காரைக்குடியில் போட்டியிட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
நடிப்பில் இருந்து அரசியலுக்கு மாறி, தவெக கட்சியைத் தொடங்கிய விஜய், களம்கண்ட முதல் தேர்தலிலேயே எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்.23-ம் தேதி நடந்தது. இதில் திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய கட்சிகள் இடையே நான்குமுனைப் போட்டி நிலவியது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்து வந்த தவெக, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1967 முதல், திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. 1967-ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ், அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த இருகட்சிகளுக்கும் மாற்றாக உருவான பாமக, மதிமுக, தேமுதிக, மநீம போன்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட முடியாமல், இந்த இரு கட்சிகளுடன்தான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன.
அதனால், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தனிப்பெருங்கட்சியாக இக்கட்சிகளால் வரமுடியவில்லை. சீமானின் நாதக யாருடனும் கூட்டணி அமைக்காவிட்டாலும், இதுவரை ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாத நிலையில்தான் உள்ளது.
இந்தச் சூழலில், திரைத் துறையில் உச்ச நட்சத்திரமாக, புகழின் உச்சியில் இருக்கும் விஜய் கடந்த 2024 பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
2024-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போதிலும், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்தான் என் இலக்கு என்று அப்போதே அறிவித்தார் விஜய். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று தொடர்ந்து கூறிவந்த அவர், அவ்வாறே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார்.
“இவரும், மற்ற கட்சிகளைப்போல காணாமல் போவார். அடுத்த தேர்தலில் திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவார்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். விஜய் ரசிகர்களின் செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு உள்ளாகின.
இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், அக்கட்சிக்கும், தலைவர் விஜய்க்கும் பெரிதும் பின்னடைவாக அமைந்தது. அதன்பிறகு, வீட்டுக்குள்ளேயே பல நாட்கள் முடங்கி இருந்தார் விஜய்.
ஆனால், குறுகிய காலத்திலேயே மீண்டெழுந்த விஜய், அதிகாரத் தடைகளை எல்லாம் தகர்த்து, மீண்டும் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு இளைஞர்களும், பெண்களும் அலைகடலென புறப்பட்டு வந்தனர்.
பெரும்பாலும் பல தொகுதிகளிலும் சாமானியர்களையே வேட்பாளராக அறிவித்தார் விஜய். பிரதானக் கட்சிகள் ஒரு ஓட்டுக்கு ரூ.1,500 முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்கியதாக கூறப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர்கள் பலரும் பிரச்சாரத்துக்குகூட செலவிட முடியாதவர்களாக இருந்தனர். வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தவெகவுக்கு சராசரியாக 20-25 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றன.
தனிப்பெரும் கட்சியான தவெக
இந்த சூழலில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, தொடக்கம் முதலே தவெகவினர் முன்னிலை பெற்று வந்தனர். 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாகவும் தவெக உருவெடுத்துள்ளது.
இதை தொடர்ந்து, தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்க உள்ளார். பெரும்பாலும் எளிய பின்னணி கொண்ட தவெக வேட்பாளர்கள், பாரம்பரியமிக்க திராவிடக் கட்சி வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளனர்.

சென்னை லயோலா கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததை அடுத்து, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட தவெக தலைவர் விஜய்.
தவெகவின் விசில் புரட்சி
இதற்கிடையே, தவெகவுக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டதும், அக்கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. விஜய் தொடங்கி,
அக்கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவரும் பிரச்சாரக் கூட்டங்களின்போது உற்சாகத்துடன் ‘விசில்’ ஊதியது, அக்கட்சிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. தவெகவின் இந்த விசில் புரட்சியால், அசுர பலத்துடன் ஆண்டு வந்த திமுக வீழ்த்தப்பட்டுள்ளது.





