உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் ராஜபக்ஷர்கள் பாலூட்டி வளர்த்த சுரேஷ் சலே கைது செய்யப்படுவார்கள் என்று எவரும் கருதவில்லை. ஊழல்வாதிகள் இந்த ஆண்டு சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள். விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ, சஷிந்திர ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, மேர்வின் சில்வா,பிரியங்கர ஜயரத்ன, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன்மார் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரின் வழக்குகள் இந்த மாதம் முதல் முறையான விசாரிக்கப்படும். இது தான் தமது முடிவு என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மோசடியாளர்களுக்கு சட்டத்தின் ஊடாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
வவுனியாவில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற மே தின கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அந்த நம்பிக்கையை நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம்.
2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பிரதான அரசியல் கட்சி மே தின கூட்டத்தை நடத்தாமல் பிரியாணி வழங்குகிறது. பிறிதொரு கட்சி தொழிலாளர் தினத்தில் மத வழிபாடுகளில் ஈடுபடுகிறது. மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் இவ்வாறான செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி 21 மாவட்டங்களில் 21 கூட்டணிகளை நடத்தியுள்ளோம். இது பாரியதொரு வெற்றியாகும்.மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சியமைத்துள்ளோம்.
தித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீண்டெழும் சந்தர்ப்பத்தில் மத்திய கிழக்கு போர் தாக்குதல்களால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளோம். இதுவும் தற்காலிகமானதே.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது நாட்டின் நிலைமை எவ்வாறு காணப்பட்டது என்பது எமக்கு நினைவில் உள்ளது. அக்காலப்பகுதியில் நாட்டில் ஏகாதிபத்திய ஆட்சியையே ரணில் – ராஜபக்ஷர்கள் உருவாக்கியிருந்தார்கள்.
ஒரு குடும்பம் இந்த நாட்டை நிர்மூலமாக்கியது. ராஜபக்ஷ குடும்பம் சுகபோகமாக வாழ்வதற்கு அரச நிதியை மோசடி செய்தார்கள். இதனால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
2022 ஆம் ஆண்டு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காணப்பட்டது. அரகலயவை தொடர்ந்து கோட்டபய ராஜபக்ஷவின் அமைச்சரவை அமைச்சர்களின் வீடுகளில் இருந்து 80 இற்கும் அதிகமான நிரப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மீட்கப்பட்டன.
மக்கள் வீதியில் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நின்றபோது அப்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சுகபோகமாக வாழ்ந்தார்கள்.
நாடு வங்குரோத்து நிலையடைந்திருந்த சந்தர்ப்பத்தில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எண்ணம் போல் வெளிநாடுகளுக்குச் சென்றார்.
தனது மனைவின் பட்டமளிப்பு நிகழ்வுக்காக லண்டனுக்கு சென்றார். அரச நிதியை தவறாக பயன்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பான உண்மைகள், இறக்காத நபர் இறந்து விட்டதாக டி.என்.ஏ. அறிக்கை வழங்கியமை தொடர்பில் பல விடயங்கள் தற்போது நீதிமன்றத்தில் வெளிப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல்கள் தொடர்பில் விசாரணைகள் தற்போது சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
உழைக்கும் மக்களின் ஆட்சி தான் தற்போது உள்ளது. இந்த காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மலையக மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரணில் -ராஜபக்ஷர்கள் விற்பதற்கு தீர்மானித்திருந்த அரச நிறுவனங்களை விற்பனை செய்யாமல் அவற்றை சிறந்த முறையில் மறுசீரமைத்துள்ளோம்.
கடந்த கால ஊழல்வாதிகள் மற்றும் படுகொலையாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.பல குற்றங்களுடன் தொடர்புடைய விமல் வீரவன்ச, ராஜபக்ஷர்கள், விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிராக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் ராஜபக்ஷர்கள் பாலூட்டி வளர்த்த சுரேஷ் சலே கைது செய்யப்படுவார்கள் என்று எவரும் கருதவில்லை.ஊழல்வாதிகள் இந்த ஆண்டு சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள்.
கடந்த கால ஊழல்கள், படுகொலைகள் குறித்து முறையான விசாரணைகள் இடம்பெறுவதால் தான் ஒருதரப்பினர் திட்டமிட்ட வகையில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 4 அல்லது 5 பேர் அரசாங்கத்தை பதவி விலகுமாறு குறிப்பிடுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ, சஷிந்திர ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, மேர்வின் சில்வா,பிரியங்கர ஜயரத்ன, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன்மார் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரின் வழக்குகள் இந்த மாதம் முதல் முறையான விசாரிக்கப்படும்.
இது தான் தமது முடிவு என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மோசடியாளர்களுக்கு சட்டத்தின் ஊடாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.




