தமிழக முதல்வர் ஆகிறார் விஜய்!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய்​யின் தவெக அதிக தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்க உள்​ளார். கொளத்​தூர் தொகு​தி​யில் தொடர்ந்து மூன்று முறை​யாக வெற்றி பெற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இத்​தேர்தலில் தோல்​வியடைந்​தது திமுக​வினரிடம் அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தனது எடப்​பாடி தொகுதியில் வெற்​றியை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார். காரைக்குடி​யில் போட்​டி​யிட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்​கட்சி வேட்​பாளர்​கள் அனை​வரும் டெபாசிட் இழந்​துள்​ளனர்.

நடிப்​பில் இருந்து அரசி​யலுக்கு மாறி, தவெக கட்​சி​யைத் தொடங்கிய விஜய், களம்​கண்ட முதல் தேர்​தலிலேயே எந்த கட்சியுட​னும் கூட்​டணி சேராமல் தனித்​துப் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றுள்​ள​தால், அக்​கட்​சி​யினர் மிகுந்த உற்​சாகம் அடைந்துள்ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்டமாக கடந்த ஏப்​.23-ம் தேதி நடந்​தது. இதில் திமுக, அதி​முக, தவெக, நாதக ஆகிய கட்​சிகள் இடையே நான்​கு​முனைப் போட்டி நில​வியது. இந்​நிலை​யில், தேர்​தல் முடிவு​கள் நேற்று அறிவிக்கப்பட்​டன. வாக்கு எண்​ணிக்கை தொடங்​கியது முதலே முன்​னிலை​யில் இருந்து வந்த தவெக, 108 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது.

தமிழகத்​தில் கடந்த 1967 முதல், திமுக, அதி​முக ஆகிய இரு திராவிடக் கட்​சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்​தன. 1967-ல் ஆட்சியை இழந்த காங்​கிரஸ், அதன் பிறகு தமிழகத்​தில் ஆட்​சிக்கு வர முடிய​வில்​லை. இந்த இருகட்​சிகளுக்​கும் மாற்​றாக உரு​வான பாமக, மதி​முக, தேமு​திக, மநீம போன்ற கட்​சிகளும் தனித்​துப் போட்​டி​யிட முடி​யாமல், இந்த இரு கட்​சிகளு​டன்​தான் கூட்​டணி அமைத்து தேர்​தலை சந்​தித்து வரு​கின்​றன.

அதனால், திமுக, அதி​முக​வுக்கு மாற்​றாக தனிப்​பெருங்​கட்​சி​யாக இக்​கட்​சிகளால் வரமுடிய​வில்​லை. சீமானின் நாதக யாருடனும் கூட்​டணி அமைக்​கா​விட்​டாலும், இது​வரை ஒரு இடத்​தில்​கூட வெற்றி பெற முடி​யாத நிலை​யில்​தான் உள்​ளது.

இந்தச் சூழலில், திரைத் துறை​யில் உச்ச நட்​சத்​திர​மாக, புகழின் உச்சி​யில் இருக்​கும் விஜய் கடந்த 2024 பிப்​.2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்​சி​யைத் தொடங்​கி​னார்.

2024-ல் மக்​கள​வைத் தேர்​தல் நடை​பெற்ற போதி​லும், 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​தான் என் இலக்கு என்று அப்​போதே அறிவித்​தார் விஜய். எந்த கட்​சி​யுட​னும் கூட்​டணி அமைக்​கப்​போவ​தில்லை என்று தொடர்ந்து கூறிவந்த அவர், அவ்​வாறே 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தனித்​துப் போட்​டி​யிட்​டார்.

“இவரும், மற்ற கட்​சிகளைப்​போல காணா​மல் போவார். அடுத்த தேர்​தலில் திரா​விடக் கட்​சிகளில் ஒன்​றுடன் கூட்​டணி அமைத்து போட்​டி​யிடு​வார்” என்று அரசி​யல் விமர்​சகர்​கள் கூறி வந்​தனர். விஜய் ரசிகர்​களின் செயல்​பாடு​களும் விமர்​சனத்​துக்கு உள்​ளாகின.

இதற்​கிடையே, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்பவம், அக்​கட்​சிக்​கும், தலை​வர் விஜய்க்​கும் பெரிதும் பின்னடைவாக அமைந்​தது. அதன்​பிறகு, வீட்​டுக்​குள்​ளேயே பல நாட்​கள் முடங்கி இருந்​தார் விஜய்.

ஆனால், குறுகிய காலத்​திலேயே மீண்​டெழுந்த விஜய், அதி​காரத் தடைகளை எல்​லாம் தகர்த்​து, மீண்​டும் சூறாவளி சுற்​றுப்​பயணத்தை தொடங்​கி​னார். அவர் பங்​கேற்​கும் கூட்​டங்​களுக்கு இளைஞர்​களும், பெண்​களும் அலைகடலென புறப்​பட்டு வந்​தனர்.

பெரும்​பாலும் பல தொகு​தி​களி​லும் சாமானியர்​களையே வேட்பாளராக அறி​வித்​தார் விஜய். பிர​தானக் கட்​சிகள் ஒரு ஓட்​டுக்கு ரூ.1,500 முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்​கிய​தாக கூறப்​பட்ட நிலை​யில், தவெக வேட்​பாளர்​கள் பலரும் பிரச்​சா​ரத்​துக்​கு​கூட செல​விட முடி​யாதவர்​களாக இருந்​தனர். வாக்​குப்​ப​திவுக்​குப் பிந்தைய கருத்​துக் கணிப்​பு​களும் தவெக​வுக்கு சராசரி​யாக 20-25 இடங்கள் மட்​டுமே கிடைக்​கும் என்றன.

தனிப்​பெரும் ​கட்​சி​யான தவெக

இந்த சூழலில், நேற்று நடை​பெற்ற வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது, தொடக்​கம் முதலே தவெக​வினர் முன்​னிலை பெற்று வந்​தனர். 108 இடங்​களில் வெற்றி பெற்று தனிப்​பெரும் ​கட்​சி​யாக​வும் தவெக உரு​வெடுத்​துள்​ளது.

இதை தொடர்ந்​து, தமிழக முதல்​வ​ராக விஜய் பொறுப்​பேற்க உள்ளார். பெரும்​பாலும் எளிய பின்​னணி கொண்ட தவெக வேட்பாளர்​கள், பாரம்​பரியமிக்க திரா​விடக் கட்சி வேட்​பாளர்​களை வீழ்த்​தி​யுள்​ளனர்.

<div class="paragraphs"><p>சென்னை லயோலா கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததை அடுத்து, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட தவெக தலைவர் விஜய்.</p></div>

சென்னை லயோலா கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததை அடுத்து, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட தவெக தலைவர் விஜய்.

தவெகவின் விசில் புரட்சி

இதற்​கிடையே, தவெக​வுக்கு ‘விசில்’ சின்​னம் ஒதுக்​கப்​பட்​டதும், அக்​கட்​சி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​துள்​ளது. விஜய் தொடங்​கி,

அக்​கட்சி வேட்​பாளர்​கள், நிர்​வாகி​கள், தொண்​டர்​கள், ரசிகர்​கள் அனை​வரும் பிரச்​சா​ரக் கூட்​டங்​களின்​போது உற்​சாகத்​துடன் ‘விசில்’ ஊதி​யது, அக்​கட்​சிக்கு மாபெரும் வெற்​றியை பெற்​றுத் தந்​துள்​ளது. தவெக​வின் இந்த விசில் புரட்​சி​யால், அசுர பலத்​துடன் ஆண்டு வந்த திமுக வீழ்த்​தப்​பட்​டுள்​ளது.