அரசாங்க நிதி பற்றிய குழு அழைப்பு விடுக்கும்போது அக்குழுவில் முன்னிலையாவதற்கு திறைசேரியின் செயலாளர் மறுக்கமுடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அரசாங்க நிதியின் பாதுகாவலர் அதுகுறித்து பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற மறுக்கும் பட்சத்தில், பாராளுமன்ற சட்டங்கள் மற்றும் நிலையியற் கட்டளைகளின் கீழ் அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் வியாழக்கிழமை (30) முன்னிலையாகுமாறு அக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்குக் கடிதம் ஊடாகப் பதிலளித்த திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, ‘இவ்விவகாரம் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (5) பாராளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. எனவே அதன்பின்னர் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவது பொருத்தமானதாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சுமந்திரன், அதில் மேலும் கூறியிருப்பதாவது:
அரசாங்க நிதி பற்றிய குழு அழைப்பு விடுக்கும்போது, அக்குழுவில் முன்னிலையாவதற்கு திறைசேரியின் செயலாளர் மறுக்கமுடியாது. கடந்த காலங்களில் நிதி அமைச்சர்கள் கூட அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டங்களில் முன்னிலையாகி, அதன் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.
அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின்படி, அரசாங்க நிதி தொடர்பான முழுமையான அதிகாரத்தைப் பாராளுமன்றம் கொண்டிருக்கவேண்டும்.
அதுமாத்திரமன்றி அந்த நிதியின் பாதுகாவலர் அதுகுறித்து பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற மறுக்கும் பட்சத்தில், பாராளுமன்ற சட்டங்கள் மற்றும் நிலையியற் கட்டளைகளின் கீழ் அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.





